தென்மாநிலங்களில் காலூன்ற ரூ.4,800 கோடி செலவில் “ஆப்ரேஷன் திராவிடம்” என்ற பெயரில் திட்டம் போட்டுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் பிரச்னைகளை உருவாக்கி மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சிக்கு வருவதே பாஜகவின் ஸ்கெட்ச் என பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பு குற்றச்சாட்டோடு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் கண்டது பாஜக. இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் உபி, 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலங்களையும் தனதாக்கிக் கொண்டது. இந்நிலையில், பாஜக கால் பதிக்க முடியாத இடமாக இருந்து வரும் தென் மாநிலங்களை எப்படியாவது வளைக்க ப்ளான் போடுகிறது பாஜக. ஆனால் மாநிலக் கட்சிகளை வீழ்த்தி பாஜகவால் அவ்வளவு எளிதாக நுழைவது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல என்பது பாஜகவிற்கு நல்லாவே தெரியும்.

இந்நிலையில், தென்மாநிலங்களில் காலூன்ற இங்கு இருக்கும் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தி பிளவுப்படுத்துதல், நடிகர்கள் மக்கள் மத்தியில் கொஞ்சம் நன்கு அறிந்த முகத்தை அரசியலில் களமிறக்குதல், கட்சி துவங்க வைத்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த திட்டத்தின் படி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவாஜி கடந்த 2014-ல் ஒருங்கிணைந்த ஆந்திரா வேண்டும் என்பதற்காக பல்வேறு சுற்றுப்பயணங்களை ஆந்திராவில் மேற்கொண்டார். பின்னர் ஒருசாரரின் கோரிக்கையை ஏற்று தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழு என்ற பெயரில் தற்போதும் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பாரதிய ஜனதா அரசு மீது  பல்வேறு குற்றச்சாட்டை வைத்துள்ளார். வரும் 2019-ம் ஆண்டை குறிக்கோளாக வைத்து  then மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு என ஒட்டுமொத்தமாக தன்வசமாக்க ஒரு மெகா திட்டத்தை போட்டுள்ளதாம், இதற்காக ரூ.4,800 கோடி ஆப்ரேஷன் திராவிடா என்ற பெயரில் திட்டத்தை வகுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து நடிகர் சிவாஜி அவர் பேசியுள்ள சுமார் 20 நிமிடங்கள் அடங்கிய வீடியோவில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தென் இந்தியாவை வளைக்க சுமார் ரூ.4,800 கோடியில் ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டத்தை தேசிய கட்சி ஒன்று துவக்கியுள்ளதாக சாடினார். அவர் தேசியக் கட்சி என குறிப்பிடுவது பாரதிய ஜனதாவை தான் என்பது எளிதாக யூகிக்க கூடியதாக உள்ளது. மாநிலக் கட்சிகளின் உதவியுடன் தேசிய கட்சிகள் எப்படி தென் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளன என விவரித்துள்ளார். 

திட்டத்தின்படி தென் மாநிலங்களை வகை பிரித்து பெயரிட்டுள்ளனர். அதாவது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்ள உள்ள பணிகளுக்கு “ஆபரேஷன் கருடா” எனவும், தமிழகம் மற்றும் கேரளாவில் காலூன்ற மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பணிகளுக்கு  “ஆப்ரேஷன் ராவணா” என்றும் கர்நாடகாவிற்கு “ஆபரேஷன் குமாரா” என பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மொத்தமாக தென்னிந்தியா முழுவதையும் வளைக்க “ஆப்பரேஷன் திராவிட” என பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த அரசியல் தகிடுதத்தங்களை நடத்த ரகசிய நபர்கள் மூலம் 4 தென்மாநிலங்களிலும் அரசியல் சித்து விளையாட்டுகள் நடத்தப்படும். இவர்களின் திட்டத்தின்படி மாநில கட்சிகளில் ஏற்படும் கோஷ்டி மோதலால் தாய் கட்சிகளில் இருந்து வெளியேறும், பலர் புதிய கட்சிகளை துவக்குவார்கள்.

மேலும் இந்த அரசியல் குழப்பம் நடைபெறும் போது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பத போல வாக்காளர்களையும் குழப்ப பல தகவல்கள் சமூக வலைதளங்கள்,  மூலம் பரப்பப்படும். இதனால் தாங்கள் நிறைவேற்ற நினைக்கும் அரசியல் நிகழ்வுகளை எளிதாக்கி கொள்ளும் வகையில் பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த அரசியல் ஆப்ரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ரூ.4,800 கோடி வரை நிதியை ஒதுக்கி அந்த தேசியக்கட்சி செயல்பட்டு வருவதாக கூறியிருக்கிறார். 

எனவே, பாஜகவின் இந்த மெகா ஆப்பரேஷனை முறியடிக்க பொதுமக்கள் இவர்களின் சதியில் விழாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.