மனதில் பட்ட கருத்தை கூறியதற்காக கமலுக்கு மிரட்டல் விடுப்பது சிறுபிள்ளைத்தனம் என நடிகர் பார்த்திபன் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல், தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஊழல் பெருகிவிட்டது என தெரிவித்தார். இதனை கண்டித்து தமிழக அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் கமலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும், இயக்கங்களும், திரையுலக பிரபலங்களும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள். இதைதொடர்ந்து கமலுக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் கூறியதாவது:-

நடிகர் கமல் கூறும் கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டால், அதை அப்படியே விட்டு விடவேண்டும். அதை செய்யாமல், அவர் கருத்தே சொல்ல கூடாது என கூறுவதற்கு நாட்டில் சுதந்திரமே தேவையில்லை.

அரசை ஆதரிப்பதும், எதிர்ப்பதும், ஒரு தனி மனிதனுடைய கருத்து. அதை முழுமையாக பதிவு செய்யவேண்டும். இதை நான், கமல் என்பதற்காக மட்டும் சொல்லவில்லை.

மக்களிடம் நம்முடைய கருத்துகளை எல்லாம் கொண்டு போய் சேர்க்கிறோம். எது சரியோ அதை அவர்கள் எடுத்து கொள்ளட்டும். கமலின் கருத்துக்காக மிரட்டல் விடுப்பது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.