தனிநபர் ஒருவர் அரசியல் கட்சிக்கு ரூ.2 ஆயிரம் வரை மட்டும் ரொக்கமாக நன்கொடை வழங்க முடியும் என்ற விதிமுறை சாத்தியமா? என்று அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்ற குழு கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்துவரும்  நாடாளுமன்ற சட்டம் மற்றும் பணியாளர் நிலைக்குழு அனைத்து தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் இது தொடர்பாக கேள்விப்பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பி, கருத்துக் கேட்டுள்ளது.

நாட்டில் நிலவும் நடப்பு பணவீக்கம், சந்தையின் அடிப்படையில் ரூ.2 ஆயிரம் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக தனிநபர் நன்கொடை வழங்குவது சாத்தியமா? என்று கட்சிகளிடம் நிலைக்குழு கேள்வியில் கேட்கப்பட்டுள்ளது.

வருமானவரிச்சட்டம் 1970ன்படி,  தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பெறும் நன்கொடைக்கு முறையாக கணக்கு காட்டினால், வருமானவரி சட்டத்தின்படி, வரி செலுத்த தேவையில்லை.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வௌிப்படைத் தன்மையையும், டிஜிட்டல் பரிமாற்றத்தையும் கொண்டு வரும் நோக்கில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  நிதி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தனிநபர் ஒருவர் ரூ.2 ஆயிரத்துக்கு அதிகமாக ரொக்கமாக நன்கொடை அளிக்க தடை கொண்டுவரப்பட்டது.

இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் வரவேற்ற போதிலும், அரசியல் கட்சிகள் மாற்று வழியில் நன்கொடை பெறாத வகையில் தடுக்க கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும், கருப்புபணம் தேர்தலில் புழங்குவது தடுக்கப்பட  வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை முற்றிலும் பணமில்லா பரிமாற்றமாக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

மத்திய அரசு அறிமுகம் செய்த நிதி மசோதாவில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நிதி அளிப்பவர்களின் முகவரியை தெரிவிக்க வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்தும் கடந்த மே மாதம் கவலை தெரிவித்த தேர்தல் ஆணையம், நிதி அளிப்பவர்களின் விவரம் தெரிவிக்காமல் பாதுகாப்பது நிதி அளிப்பதில் வௌிப்படைத்தன்மையை குறைத்து, பின்னடைவை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்தது.

ஆனால், மத்திய அரசு தரப்பிலோ, தேர்தல் நிதி பத்திரங்கள் என்பது, நன்கொடை அளிக்கும் முறையில் கருப்புபணத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்டது. இந்த முறையை சிறப்பாக செயல்படுத்த அரசியல் கட்சிகளிடம் தேவையான ஆலோசனைகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.