நாடாளுமன்றத்  தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சி ஜெயிக்கும் என பல ஆங்கில ஊடகங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி ரிசல்ட்டை வெளியிட்டன அதில் பெரும்பாலான ஊடகங்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றும் என முடிவுகளை வெளியிட்டனர்.

இந்த ரிசல்ட்,  கூட்டணி அமைக்கப்படாததற்கு  முன்பு எடுக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அதிமுகவுடன் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தக் கூட்டணியில் தேமுதிக இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இதை போல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடது சாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

கருத்துக் கணிப்புகள் குறித்து கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழகத்தில் பொது மக்களுக்கு  சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முக்கியமாக  பொங்கல் பரிசாக குடும்ப அட்டைகளுக்கு  1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டமும் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும்  3000 ரூபாய் கிடைத்துள்ளது. இது போக மத்திய அரசின் திட்டப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2000 ரூபாய் விரைவில் வழங்கப்பட உள்ளது.

இப்படி அதிரடி சலுகைகளால் மத்திய – மாநில அரசுகள் தமிழக மக்களை திக்குமுக்காடச் செய்து வருவதால் தற்போதைய அரசுக்கு ஓரளவு செல்வாக்கு அதிகரித்துள்ளது.  இதைத் தொடர்ந்து தான் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி உளவுத் துறையை ஒரு கருத்துக் கணிப்பு நடத்த  உத்தரவிட்டார்.

தற்போது இந்த உளவுத்துறை எடுத்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்த்து எடப்பாடியே அசந்து போய் விட்டாராம். அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் , 20 முதல் 23 தொகுதிகளை அதிமுக மகத்தான வெற்றி பெறும்  என தெரிய வந்துள்ளது.

வலுவான கூட்டணி, மக்களுக்கு சென்றடைந்துள்ள பணம் போன்றவை காரணமாக இந்த ரிசல்ட் வந்துள்ளது என உளவுத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ள எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்குள் மேலும் பல சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போய்விடுவோமோ என பயந்து கொண்டிருந்த எடப்பாடி இனி இறங்கி அடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.