தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில்குமார் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். 

மக்களவை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய போதே ரகசியமாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பேரம் படியாததால் திமுகவை கழற்றிவிட்டு அதிமுக கூட்டணி பாமக இணைந்தது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19-ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் முன்னிலை பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் மற்றும் பாமக வேட்பாளர் அன்புமணி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். தற்போதையை நிலவரப்படி அன்புமணி 50,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் 3 லட்சத்து 82 ஆயிரத்து 216 வாக்குகளும், அன்புமணி 3 லட்சத்து 35 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்றுள்ளனர்.