திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. 

கனிமொழி இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவிட்டார். தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிவடைகிறது. மக்களைத் தேர்தல் முடிந்து அடுத்த இரு மாதங்களில் பதவி முடிவுக்கு வருகிறது. இந்த முறையும் மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழியால் முடியும். சட்டப்பேரவையில் திமுகவுக்கு கூடுதலாகவே இருக்கிறார்கள். ஆனால், இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி ஆர்வம் காட்டவில்லை. மக்களைச் சந்தித்து வெற்றி பெறவே விரும்புகிறார். 

அதற்கு ஏற்றார்போல, வரும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தின்போது தூத்துக்குடியில் உள்ள வெங்கடேசபுரம் என்ற கிராமத்தை கனிமொழி தேர்வு செய்தார். கனிமொழியின் தாயார் ராசாத்தியம்மாள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பகுதியில் நிறைந்துள்ள நாடார் இன மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதாலும் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இதுவரை கனிமொழி மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆர்வம் காட்டிவந்தார். ஆனால், தற்போது கட்சித் தலைமையும் அவர் தேர்தலில் போட்டியிட பச்சைக் கொடி காட்டிவிட்டது. ஆனால், தூத்துக்குடி தொகுதி மட்டுமல்ல, தஞ்சாவூர், சென்னையில் உள்ள தொகுதி என ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என்று திமுகவினர் கூறுகிறார்கள்.

எந்தத் தொகுதி என்பதை ஸ்டாலினிடமே கனிமொழி விட்டுவிட்டார். அண்ணன் கை காட்டும் தொகுதியில் தங்கை நிற்பார் என்று அடித்துச் சொல்கிறார்கள் திமுகவினர்.