தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது 5 தொகுதிகளிலிருந்து தொடங்க திமுகவும் 10 தொகுதிகளிலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடங்க காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு வருகிறது. 

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள்தான் ஒதுக்க வேண்டும் என்று திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கூறி வருகிறார்கள். காங்கிரஸுக்கு வழங்கும் தொகுதியில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுவிடும் என்பதால், தொகுதி பங்கீட்டில் கறாராக இருக்க வேண்டும் என்றும் திமுகவினர் பேசி வருகிறார்கள். 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளை காங்கிரஸுக்கு திமுக வழங்கியது. இதில் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. எஞ்சிய தொகுதிகளில் எல்லாம் அதிமுக வெற்றி பெற்றது. திமுக தோல்விக்கு காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்கியதுதான் காரணம் என்று அப்போது முதலே திமுகவினர் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முன்புபோல செல்வாக்கு இல்லை என்றும்  திமுகவினர் வாதத்தை முன்வைக்கின்றனர்.

அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எல்லாம் இந்தக் கருத்தை ஸ்டாலினிடம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள் திமுக மாவட்ட செயலாளர்கள். மேலும் அதிகத் தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பதும் திமுகவினர் விருப்பமாக உள்ளது. குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்றும் திமுகவினர் விரும்புகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் காங்கிரஸுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேச்சும் திமுகவில் உலா வருகிறது. 

திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேசுவது வாடிக்கை. குழு முடிவைத் தாண்டி கட்சி தலைமை இறுதி முடிவு எடுக்கும். அந்த வகையில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது 5 தொகுதிகளிலிருந்துதான் திமுக பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த தொகுதியிலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தங்களுக்கு சாதமகமாக முடியும் என்பது திமுகவின் திட்டம். 

ஆனால், காங்கிரஸ் தரப்பிலோ 2004-ம் ஆண்டு பார்முலாபடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு வருகிறது. அப்போதைய தேர்தலில் மாநில அளவில் பெரிதாகப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. நேரடியாக சென்னை வந்த மன்மோகன் சிங், அன்றைய  திமுக தலைவர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்தார்.

இப்போது போலவே அப்போதும் அதிக கூட்டணி கட்சிகள் திமுகவில் இருந்தன. இருந்தாலும் மேலிட மட்டத்தில் பேசி 10 தொகுதிகளை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது. அதுபோல இந்த முறையும் மேல்மட்ட தலைவர்களை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு வருகிறது. என்ன நடக்கும் என்பது பிப்ரவரி இறுதியில் தெரிந்துவிடும்.