பாமக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அனைத்துத் தொகுதிகளையும் அள்ளியது. தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மட்டும் பாமக சார்பில் வெற்றி பெற்றார்.

 

அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில்  பாமக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அந்த தேர்தலின்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என  டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். 

 

அதே நேரத்தில் பாமக தலைமையை ஏற்றுக்  கொண்டு எந்தக் கட்சியாவது கூட்டணி அமைக்க விரும்பினால் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, முதலமைச்சர்  மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத் துறையில், கடந்த 7 ஆண்டு காலமாக ஊழல் நடைபெற்றுக்கொண்டுள்ளது என ஆளுநர் ரோசைய்யா மற்றும் பன்வாரிலாலிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது , ஆர்.எஸ். பாரதி தொடுத்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என்றும், அதைத் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளி வராது. எனவேதான், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

 

எனவே, இந்தச் சூழலில், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் அல்லது ஆளுநர் அவரைப் பதவி நீக்கம்செய்ய வேண்டும் என அன்புமணி குறிப்பிட்டார்.

7 பேர் விடுதலையில் 2 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அன்புமணி இந்த விஷயம்  பா.ஜ.க-வுக்குத் தெரியாதா... ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  என்றார்.

 

ஊழல் செய்வதும் ஒன்று, ஊழலை ஆதரிப்பதும் ஒன்று என குறிப்பிட்ட அன்புமணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  நிச்சயமாக கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.