நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டதா என்ற சந்தேகம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக எதிர்கொள்ள உள்ளது. கடந்த காலங்களில் ஒன் மேன் ஆர்மியாகச் செயல்பட்டு அதிமுகவை கரை சேர்த்தவர் ஜெயலலிதா. ஆனால், அவர் இல்லாமல் எதிர்கொள்ளும் இந்தத் தேர்தல் அதிமுகவைப் பொறுத்தவரை பெரும் சவால்தான். வழக்கமாக ஜெயலலிதா காலத்தில் விருப்ப மனுக்களைப் பெற அறிவிப்பு வெளியிட்டால், லாயிட்ஸ் சாலையில் போக்குவரத்தே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு கூட்டம் அள்ளும். 

ஆனால், கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்படும் நிலையில், கடைசி நாள் வரை 1300 பேர் மட்டுமே விருப்ப மனுக்களைப் பெற்று சென்றிருந்தனர். விருப்ப மனுக்கள் குறைவாக வந்திருந்தால், அதன் காலக்கெடுவை அதிமுக தலைமை நீட்டித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவினர் அளித்த விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியது. ஜெயலலிதா பெயரில் மட்டும் சுமார் 7,936 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். 

தற்போது வரை அதிமுகவில் குறைவான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் மத்தியில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் குறைந்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களும் அப்படித்தான் உணரத் தொடங்கியுள்ளனர். ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் சுற்றி வந்த தீவிரமான அதிமுக தொண்டர்களிடம் பேசும்போது, அந்த ஆதங்கத்தை அவர்களும் வெளிப்படுத்தினர்.

“தற்போது எம்.பி.யாக உள்ளவர்களே தேர்தலில் போட்டியிட ஆர்வமக உள்ளார்களா என்று தெரியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது ஒவ்வொரு தொகுதிக்கும் செலவுக்கு பணத்தை கொடுத்துவிடுவார். இதனால், வசதி வாய்ப்பு குறைந்த வேட்பாளர்கள் கூட தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், வரும் தேர்தலில் போட்டியிடுவோருக்கு அப்படி செலவுக்கு பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

முழுமையாக சொந்த செலவில் தேர்தலை எதிர்கொள்ளவும் பலர் ஆர்வம் காட்டவில்லை. இன்னொன்று தினகரனால் வாக்கு பிரிப்பு ஏற்பட்டால், வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகமும் பலரிடமும் இருக்கிறது. இதனால், தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்களோ என்ற எண்ணம் இருப்பதாகத் தோன்றுகிறது” என கவலையோடு சொல்கிறார்கள். அதிமுகவில் விருப்ப மனுவை அளிக்க நாளைதான் (14-ஆம் தேதி) கடைசி நாள் என்பதால், இன்றும் நாளையும் கணிசமானோர் விருப்ப மனுக்கள் அளிப்பார்கள் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.