பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரியை கைகழுவி வேறு தொகுதியில் நிற்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணியை இறுதி செய்யாத கட்சிகள் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன. பாமக இந்த முறை கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்திருப்பதால், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே கடந்த முறை தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்புமணி ராமதாஸ், இந்த முறை தொகுதி மாற திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. 2014-ல் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை ஓரங்கட்டி அன்புமணி வெற்றி பெற்றார். ஆனால், 2016ம் ஆண்டில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பென்னாகரம் தொகுதியில் திமுக வேட்பாளரிடம் அன்புமணி தோல்வியடைந்தார்.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதுபோன்ற பின்னடைவு எதுவும் ஏற்படாமல் இருக்க அன்புமணி விரும்புகிறார்.

 

அதன் ஒரு பகுதியாகத்தான் ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற அன்புமணி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இங்கே அதிமுக 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. திமுகவும் பாமகவும் சுமார் 2.5 லட்சம் வாக்குகளைப் பெற்றன. பாமகவைவிட 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே திமுக கூடுதலாகப் பெற்றது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும்பட்சத்தில் ஓட்டு பிரிப்பு, அதிமுகவின் பாரம்பரிய ஓட்டு ஆகியவற்றின் மூலம் சுலபமாக வெற்றி பெறலாம் என நினைக்கிறார் அன்புமணி.

  

அதனால், ஆரணியில் அன்புமணி களம் காண வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாமகவினர் கூறுகிறார்கள். அதற்கேற்ப கடந்த முறை ஆரணி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வேறு தொகுதியில் போட்டியிட முயற்சி செய்துவருகிறார். இதன் மூலம் அன்புமணிக்காக வேறு தொகுதிக்கு மூர்த்தி மாறுகிறார் என்றும் பாமகவினர் கூறுகிறார்கள்.