தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக தேர்தல் அறிவித்த பிறகு நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க இந்த முறை ஆறு மாதங்கள் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க மற்றும் இடதுசாரித் தலைவர்களை இந்த மாத துவக்கத்திலேயே ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசினார். அண்ணா அறிவாலயம் மற்றும் ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சந்திப்புகளின் போது தொகுதிப் பங்கீடு வரை பேசப்பட்டது தான் தற்போதைய தகவல். 

அந்த வகையில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை தாண்டி யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்கிற முடிவை கூட தி.மு.க எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் தொடங்கி இடதுசாரிகள் வரை யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பதை கூட தி.மு.க அடையாளம் கண்டு அந்தந்த கட்சிகளுக்கு தகவல் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ம.தி.மு.கவுக்கு 2 தொகுதிகள் என்பதை தி.மு.க இறுதி செய்துள்ளது.  

விருதுநகர் மற்றும் ஈரோடு தொகுதிகளை ம.தி.மு.கவுக்கு வழங்க தி.மு.க முன்வந்துள்ளது. அதாவது கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் விருதுநகர் மற்றும் ஈரோட்டில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு ம.தி.மு.க வென்றது. இதே போன்று 2009 தேர்தலிலும் ஈரோடு தொகுதியை ம.தி.மு.க கைப்பற்றியது.

 

 கடந்த 2014ம் ஆண்டு தேர்தலிலும் ஈரோடு மற்றும் விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க போட்டியிட்டுள்ளது. அந்த வகையில் அந்த இரண்டு தொகுதிகளையும ம.தி.மு.கவிற்கு வழங்கிவிடலாம் என்று தி.மு.க கருதுகிறது. அதே சமயம் விருதுநகர் தொகுதியை காங்கிரசும் கேட்கும் என்று தெரிகிறது. காங்கிரசுக்கு விருதுநகரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் காஞ்சிபுரம் ம.தி.மு.கவிற்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.