parliamentary election join the anbumani ramadoss ttv dhinakaran

அமமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரனுடன் கூட்டணி அமைப்பது குறித்து அன்புமணி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி முடிவெடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளு மன்றத் தேர்தலில் மட்டுமல்ல, இனி எப்போதுமே திமுக வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் அவர் கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாமக சார்பில் தர்மபுரியில் அன்புமணியும், பிஜேபியில் பொன் ராதகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர். மீதி அணைத்து தொகுதிகளிலும் பாமக மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவியது. அடுத்தபடியாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி முதல்வேட்பாளராக முன்னிறுத்தி பாமக தனித்து போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட பாமக-வால் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியும் தோல்வியுற்றார். இதனால் தற்போது உள்ள சூழ்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி மிகவும் அவசியமானது என்று தொண்டர்களிடையே அன்புமணி கூறி வருகிறார். ஆனால், யாருடன் கூட்டணி வைப்பது என்ற முடிவில் பாமக தொண்டர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக திமுக விற்கும், பாமக விற்கும் நிறைய மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது. அன்புமணியும் திமுக வை கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.அதனால் திமுக வுடன் பாமக கூட்டணி என்பது நடக்காத ஒன்று. அதேபோல ஆளுமை இல்லாத திமுக வுடன் கூட்டணி வைக்க விருப்பம் இல்லை என சொல்லிவிட்டாராம் அன்புமணி. அதேபோல தேமுதிக, பாஜக போன்ற பழைய கூட்டணியை புதுப்பிக்கவும் அன்புமணிக்கு விருப்பமில்லையாம். இந்த சூழலில் தினகரனுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே கட்சிக்கு நல்லது என்றும், நாளுக்கு நாள் தினகரனுக்கு ஆதரவு பெருகிவரும் இந்த நேரத்தில் தினகரனுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி சுலபமாக கிடைத்துவிடும் என்றும் அன்புமணி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.