அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டே ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கடந்த ஞாயிறன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சந்தித்து பேசியுள்ளார். தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினை நேரில் வாழ்த்தவும், அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் உடல்நிலை குறித்து விசாரிக்கவுமே ஸ்ரீஸ்ரீ சென்னை வந்ததாக கூறினார். ஆனால் உண்மையில் ஸ்டாலினுடன் சில அரசியல் விஷயங்களையும் ஸ்ரீஸ்ரீ பேசிவிட்டு சென்றுள்ளார்.

பா.ஜ.கவின் மிக முக்கிய தலைவர்கள் அனைவருடனும் நெருக்கமாக இருப்பவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். பிரதமர் மோடியுடன் எந்த நேரத்திலும் பேசக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்துவிட்டு சென்றதில் அரசியல் இல்லை என்று சொன்னால் தி.மு.க தொண்டர்கள் கூட நம்பமாட்டார்கள். அதுவும் 20 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பின் போது, பா.ஜ.கவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வது ஏன் என்று ஸ்ரீஸ்ரீ கேட்டதாக சொல்லப்படுகிறது. 

அதற்கு தற்போது தமிழகத்தில் ஆட்சியில் அ.தி.மு.க இருந்தாலும் கூட அந்த ஆட்சியை தாங்கி பிடித்திருப்பது பா.ஜ.க தான். பா.ஜ.க கைவிட்டுவிட்டால் எடப்பாடி அரசால் ஒரு நிமிடம் கூட நீடிக்க முடியாது. எனவே தான் இந்த ஆட்சியை தாங்கி பிடித்துள்ள பா.ஜ.கவை தான் விமர்சிப்பதாக ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார். இதனை கவனமாக கேட்டுக் கொண்ட ஸ்ரீஸ்ரீ, நிச்சயம் நீங்கள் கூறுவதில் லாஜிக் இருக்கிறது என்று கூறிவிட்டு புறப்பட்டுள்ளார்.

 

முதல் நாள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஸ்டாலினை சந்தித்த நிலையில் மறுநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசியுள்ளார். ஸ்டாலின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே தான் வந்ததாக திருநாவுக்கரசர் கூறினார். ஆனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் பேசியுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப்பங்கீடு தான் பிரதானமாக இருந்துள்ளது. 

அதிலும் ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளைத்தான் ஸ்டாலின் ஒதுக்குவார் என்கிற ரீதியில் தகவல்கள் வெளியாவத குறித்து அவரது கவனத்துக்கே திருநாவுக்கரசர் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அது குறித்து பேசும் போது முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் மிக இயல்பாக ஸ்டாலின் இருந்ததாகவும் கடைசி வரை திருநாவுக்கரசருக்கு பிடி கொடுக்காமலேயே பேசியதாக சொல்லப்படுகிறது. பேச்சோடு பேச்சாக தமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் போட்டியிட ராகுல் விரும்புவது போல் தெரிகிறது என்று திருநாவுக்கரசர் கூறியதாகவும், அதற்கும் ஸ்டாலின் எந்த ரியாக்சனும் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. 

ஆனால் திருநாவுக்கரசரிடம் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் போது நிகழ்ந்தவை, அப்போது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என பல விவகாரங்கள் குறித்து ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது முதற்கட்ட சந்திப்பு என்பதால் ஸ்டாலின் பேச்சை திருநாவுக்கரசரும், திருநாவுக்கரசர் கூறியதை ஸ்டாலினும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில். அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதும் தான் சிக்கல்களுக்கு வாய்ப்பு என்கிறார்கள் தி.மு.க உயர்மட்ட நிர்வாகிகள்.