நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது. தற்போது விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 உதவித் தொகையை மத்திய அரசு ஏன் 2018ம் ஆண்டு அறிவிக்கவில்லை? மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. 

ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? பாஜக அரசின் அனைத்து திட்டங்களும்  தோல்வியடைந்து விட்டன. கொடுத்த வாக்குறுதி எதனையும் பாஜ நிறைவேற்றவில்லை. இவ்வாறு தம்பிதுரை கடுமையாக விமர்சித்தார். 

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா? அல்லது அரசின் கருத்தா? என திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் மத்திய பாஜக அரசை விமர்சித்து மக்களவையில் தம்பிதுரை பேசியது தவறில்லை. எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை. மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளதில் எந்த தவறும் இல்லை என ஜெயக்குமார் அதிரடியாக பதிலளித்துள்ளார்.