திமுக கூட்டணியில் புதிதாக பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் மு.ஸ்டாலினை இன்று அண்ணா அறிவிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். திமுக கூட்டணி குழுவினரையும் அவர் சந்தித்துப்பேசினார்.  

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தது. வரும் மக்களவை தேர்தலிலிம் பாஜக கூட்டணியில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரம்பலூர் தொகுதியை கேட்டு வந்த இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அதிமுக இசைந்து கொடுக்கவில்லை. இதனையடுத்து கமல்ஹாசனின் மக்கள் மய்யம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் களமிறங்க தயாராகி வந்தார் பாரிவேந்தர். 

இந்நிலையில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். திமுக தரப்பில் பாரிவேந்தர் கேட்கும் தொகுதியைத் தர திமுக ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுவை உள்பட 10 சீட்டுகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், ஈஸ்வரன் கொங்கு நாடு தேசிய மக்கள் கழகம் கட்சிக்கும் தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.