திமுகவின் இத்தகைய அடக்குமுறைகள் தொடர்ந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசிற்கும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கும் பரந்தூர் பகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடைக்கி ஒடுள்ளி கைது செய்திருப்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும் என சீமான் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர். 

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல்.. சீமானின் மனைவி கயல்விழிக்கு நாதகவில் முக்கிய பதவி.!

ஆனால், திமுக அரசு போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதியாது, ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக புதிய வானூர்தி நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை திமுக அரசு கட்டாயப்படுத்தி கைது செய்திருப்பது அரச பயங்கரவாதமாகும். விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடைக்கி ஒடுள்ளி கைது செய்திருப்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும். 

சனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதிமறுத்து திமுக அரசு கைது செய்வதென்பது வெட்கக்கேடானதாகும். மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் என்ன இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? திமுகவின் இத்தகைய அடக்குமுறைகள் தொடர்ந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசிற்கும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கும் பரந்தூர் பகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 

இதையும் படிங்க: "நோட்டு பெட்டிக்கும் ஓட்டு பெட்டிக்கும் சீமான் அண்ணன் சுற்றுவது போல தெரிகிறது" - பாஜக தலைவர் அண்ணாமலை!

எனவே, தமிழ்நாடு அரசு கைது செய்யப்பட்டுள்ள ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் கூறியுள்ளார்.