கடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு திமுக உள்பட
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் சட்டப்பேரவை எதிர்க்கட்சிகளான திமுக,
காங்கிரஸ் உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் வெளியேற்றப்பட்டனர்.
அப்போது, திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை, சட்டப்பேரவை பாதுகாவலர்கள், வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது, அவர் மீது தாக்குதல்
நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவர்னரிடம் திமுக சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில்
தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது தவறு என்றும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் திமுக சார்பில் இன்று ஒரு
நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என அதிமுக செய்தி
தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், செய்தியாளர்களிடம் கூறினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ரகசிய வாக்கெடுப்பு என்பது தமிழகம் மட்டுமின்றி எந்த மாநில சட்டப்பேரவையில் கிடையவே கிடையாது. நாடாளுமன்றத்தில் கூட அதுபோன்ற வாக்கெடுப்பு
நடந்தது இல்லை. ரகசிய ஓட்டெடுப்பு பொதுமக்களுக்கு உண்மை நிலையை விளக்காது; ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும்.
கட்சி தாவல் சடை சட்டத்திற்கு எதிரானது. ரகசிய வாக்கெப்பு நடந்தால் கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்க போவதாக கூறிய தி.மு.க., பின்னர் அதனை எதிர்க்க போவதாக கூறியது. இதற்கு தங்களுக்கு போதிய உறுப்பினர்கள்
ஆதரவு கிடைக்காததே காரணம்.
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தி.மு.க., செயல்படுகிறது. இதற்காகவே அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை சபாநாயகர்
வெளியேறும்படி கூறினார். ஆனால், அவர்கள் ரகளையில் ஈடுபட்டதால், காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியினரை வெளியேற்ற சொல்லவில்லை. அவர்களே, தங்களது கூட்டணி கட்சி திமுக வெளியேறும்போது, நாமும் வெளியேறலாம்
என போய்விட்டன. திமுக, அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது.
இது ஆக்கப்பபூர்வமான செயல் அல்ல. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் இழப்பையும், ஆபத்தையும் விளைவிக்கும். மக்களிடையே குழப்பத்தை
ஏற்படுத்தவே தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.