நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் அதிருப்தி அடைந்த ஓ.பி.எஸ் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யபட்டார். இதையடுத்து எடப்பாடி 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

ஆனால் சபாநாயகர் தனபால் ரகசிய வாக்கெடுப்புக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் சபையை ஒத்திவைக்க கோரி திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்டாலின் உட்பட திமுகவினர் அனைவரும் வெளியேற்றபட்டனர்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இனி அரசியல் பயணத்தில் அவருடன் இணைந்து செயலாற்ற உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், மைத்ரேயன் எம்.பி. செம்மலை எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவம் குறித்து கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் விளக்கியதாக கூறப்படுகிறது.
கவர்னரை சந்தித்த பின் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
