’டெபுடி சி.எம். பன்னீர் மகன் கூட பிரசாரத்துக்கு போறதுக்கு பதிலா உச்சி வெயில்ல, மொட்ட மாடியில மல்லாக்க படுத்து தூங்கலாம்!’........இப்படி புலம்புகிறார்கள் ரவீந்திரநாத்தின் நண்பர்களும், கழக இளைஞரணியினரும். 

என்னப்பே பிரச்னை? மகன் ரவீந்திரநாத்தை அட்லீஸ்ட் எம்.பி.யாக்குவது, வாய்ப்பிருந்தால் ஸ்டிரெய்ட்டா மத்தியமைச்சராக்கிவிடுவது என்று செம்ம கற்பனையுடன் ஸ்கெட்ச் போட்டு, தேனி தொகுதியை அவருக்காக தூக்கிக் கொடுத்திருக்கிறார் பன்னீர்செல்வம். ஆனால் ரவிக்கு எதிராக சொந்த கட்சியின் முக்கிய புள்ளிகளே காய்களை நகர்த்துவதாக  அவருக்கு சில தகவல்கள் பாஸாகிக் கொண்டிருக்கின்றன தினமும். 

இந்த சதிகளையெல்லாம் முறியடிக்க ஒரே வழி, தெய்வ வழிபாடும், பரிகாரங்களும்தான்! என்று நம்புகிறார் மிஸ்டர் ஓ.பி.எஸ். அதனால் வரிசையாக கோயில்களுக்கு மகனை அனுப்பி வைத்து அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் செண்பகதோப்பில் உள்ள தங்கள் குடும்ப கோயிலுக்கு மகனை அனுப்ப நினைத்தார். ஆனால் ஆளுங்கட்சியின் சூலூர் எம்.எல்.ஏ. மரண செய்தி வந்து சேர்ந்தது பன்னீரின் காதுகளுக்கு. இதனால் ப்ரோகிராமை ஒத்திவைத்தவர், மறு நாள் அனுப்பினார் மகனை. 

ஆனால் அன்று ‘தேனியில நம்ம ரவியை எதிர்த்து தங்கத்தமிழ் போட்டி போடுறாப்ல தலைவரே!’ என்று அவரது காதில் பேரதிர்ச்சி தகவலை ஓதினர் கட்சியினர். இதில் ஏக அப்செட் பன்னீர். இதையடுத்து இஷ்ட ஜோஸியரிடம் அவர் குறிகேட்க அமர்ந்தார். அப்போது ‘நிலவரம் சரியில்லதான். ஆனாலும் பரிகாரம் இருக்குது. பிரசாரத்துல உம்ம மகன் இருக்குறப்ப, அவரு காதுல கெட்ட சேதி விழாம பார்த்துக்கிடுங்க!’ என்றாராம். இதையடுத்து, மகன் ரவியுடன் பிரசாரத்துக்கு செல்லும் அவரது நண்பர்கள், கட்சியினர், இளந்தாரிகளை அழைத்து, ‘யப்பே! பிரசாரத்துல  இருக்குற ரவிட்ட ஆரும் கெட்ட சேதி, நெகடீவ் விஷயங்கள சொல்லக்கூடாது. 

எதுனாலும் எனக்கு தாக்கீது கொடுங்க, நா கவனிச்சுக்கிடுறேம். அவன சூதானமா பாத்துக்கிடுங்கப்பூ’ என்று ஸ்டாண்டிங் ஆர்டர் போட்டிருக்கிறாராம். இதையடுத்து ‘வெயில் ஓவரா இருக்குது, இந்த சந்துல நடந்து போக முடியாது, சாப்பாடு காலி.’ என்று எந்த நெகடீவ் தகவலையும் ரவியின் காதில் போட முடியாமலும், அப்படியே சொன்னாலும் இன்னொரு நிர்வாகியின் கோபத்துக்கு ஆளாவதாலும் நொந்து கிடக்கிறார்களாம் கழக நிர்வாகிகள். என்னப்பே பொழப்பு இது!