கஜா புயல் தமிழக அமைச்சரவைக்குள்ளும் டேமேஜை உருவாக்கி  இருக்கிறது. இந்த புயல் விஷயத்தில் தான் சாதித்து விட்டதாக அமைச்சர் உதயகுமார் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் சொன்ன தகவல்களால் தான் அசிங்கப்படுத்தப்பட்டு விட்டதாக அவர் முதல்வரிடம் கொதித்துள்ள தகவல்கள் இப்போது லீக் ஆகின்றன. 

விவகாரம் இதுதான்... கஜா புயல் கரையை கடப்பதற்கு முன் பெருமளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. அதிலும், வருவாய் மற்றும், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் புயல் கரைகடக்கும் நாளன்று மணிக்கணக்கில் சிறப்பு அலுவலகத்தில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார். புயல் கரை கடந்த சில மணி நேரங்களில் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின.

 

இவ்வளவு கடுமையான புயல் வீசியும், இழப்புகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததற்கு அரசின் சாமர்த்திய நடவடிக்கையே காரணம் என்று பாராட்டுகள் குவிந்தன. எதிர்கட்சிகளும் கூட தமிழக அரசை பாராட்டி தள்ளிய நிலையில், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் இந்த விஷயத்தில் பெரிதாய் ஸ்கோர் செய்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் புயல் கடுமையாக தாக்கிய நாகை மாவட்டத்தின் உட்பகுதியிலிருந்து தகவல்கள் வேறு விதமாய் வந்தன. அதாவது மிகக் கடுமையாய் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் புலம்பினர். அமைச்சர் உதயகுமாரும், சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணனும் ஸ்பாட்டுக்கு சென்றபோது மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகினர். தங்கள் பகுதிகளை கடந்து சென்ற அரசு வாகனங்களை சிறைப்பிடித்து ஆத்திரத்தை காட்டினர் மக்கள். 

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நாகை மாவட்டம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது “கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசு எதிர்பார்த்ததற்கு மாறாக, பாதிப்பு அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் நாகை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.” என்று வெளிப்படையாக சொன்னவர், கூடவே துரித நிவாரணத்துக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் விளக்கி முடித்தார். 

இந்நிலையில் பன்னீரின் வார்த்தைகளால் அமைச்சர் உதயகுமார் கடும் டென்ஷனாகி இருக்கிறார். புயலின் தாக்கத்தை முன்னரே கணித்து அருமையாக செயல்பட்டதாக தான் பெயர் வாங்கி வைத்திருந்த நிலையில், ஏற்கனவே மக்களின் கோபத்தினால் பற்றி எரியும் பகுதியில் போய் நின்றபடி பன்னீர் இப்படி பேசியது தன்னுடைய இமேஜை பெரிதும் டேமேஜ் செய்துவிட்டது என்று ஏக டென்ஷனாகி இருக்கிறார்.  

இது குறித்து முதல்வரிடமே ’என்னை அசிங்கப்படுத்திட்டார் துணை முதல்வர். புயல் விஷயத்துல எதிர்கட்சிகளும் பாராட்டுற விதமாகதான் நம்ம அரசின் நடவடிக்கை இருந்துச்சு. ஆனால் எனக்கு கிடைச்ச புகழை சிலரால் தாங்கிக்க முடியலை. சம்பந்தப்பட்ட இடத்துலேயே போயி நின்னு இப்படி பேசியிருக்காரே. எதிர்கட்சி தலைவர் கூட நம்மை பாராட்டினார், ஆனா நம்ம கட்சியின் துணை முதல்வரோ எதிரிகட்சி ஆள் போல் பேசியிருக்கிறார். இன்னும் அவர் மாறலை.” என்று பொங்கிட, முதல்வர்தான் சமாதானம் செய்திருக்கிறார். 
 
இது ஒரு புறமிருந்தாலும், பன்னீர்செல்வத்துக்கும் ஆர்.பி.உதயகுமாருக்கும் ஏற்கனவே பெரும் பகை இருந்ததை இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். தான் வளைய வரும் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்தை அவ்வப்போது சீண்டும் வகையில் சில காரியங்களை பண்ணுவதும், பேசுவதும் உதயகுமாருக்கு வழக்கமாய் இருப்பதாக இப்பவும் பன்னீரின் ஆதரவாளர்கள் ஆதங்கப்படுவது உண்டு.

அதிலும் பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ நடத்தியபோது அவரை மிக மோசமாக வர்ணித்தவர்களில் உதயகுமார் மிக முக்கியமானவர் என்பதையும் நினைவில் கொள்க. ஆக பழைய பகைக்கு பழிவாங்கிட்டார்  பன்னீர்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கஜாவை விட இவங்க பகை ரொம்ப டெரரா இருக்கும் போலிருக்குதே!