அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் தேர்தலில் தமது மகன் போட்டியிட உரிமை உள்ளது என துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அதிமுக தலைமையில் தான் அமையும். தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.  

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழகத்தில் முதல் கட்சியாக அதிமுக தொடங்கியுள்ளது. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மாநில கட்சிகளுடனான கூட்டணி அமைக்க பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவரது மகன் விருப்பமனு பெற்றது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் குடும்பத்தினர் தான் அரசியலுக்கு வரக்கூடாது என்று தெரிவித்ததாகவும் மற்றபடி வேறு யாரும் திறமை, தகுதி இருந்தால் அரசியலுக்கு வரலாம் என்றும் ஓ.பி.எஸ் கூறினார். 

கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை கூட்டணி இறுதியான பின்னர் அதிமுக எத்தனை தொகுதி போட்டியிட உள்ளது என்பது தெரியவரும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.