தமிழகத்தில் வருமான வரித் துறை சோதனை தொடர்ந்து வந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்றிரவு டெல்லிக்கு பறந்தார்.

கடந்த சில மாதங்களாக டெல்லி செல்லாத துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்றிரவு தனது ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் டெல்லி சென்றார். அவரை டெல்லி விமான நிலையத்தில் மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகமாக   வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். மக்களைவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.

மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை இன்று பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. இது அரசு முறை பயணம் அல்ல என்றும் தனிப்பட்ட முறையிலான பயணம் என்றும் சொல்லப்பட்டது. நிர்மலா சீதாராமன் சந்திக்க பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும் அவர் தர மறுத்துள்ளதாக தெரிகிறது, ஆனால் மைத்ரேயனுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளார்.

இதனையடுத்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்திக்க பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்ற பன்னீர் எதற்காக அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கணும்? என பேச்சு எழுந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக  சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்யும் கிரிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.  அதேபோல நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்கான ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்ரமணியனின் பங்குதாரராவார். தொடர் சோதனைகள் நடைபெற்று வரும் இந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எடப்பாடி-பன்னீர் இடையே முட்டல்கள் இருந்துவருவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடியை பற்றி போட்டுக் கொடுக்க பன்னீர் சென்றுள்ளதாக  அதிமுக வட்டாரங்களில் ஒரே பரபரப்பான மேட்டராக உலாவருகிறது.