Panneerselvam team members Political drama
ரணகளமான கேங்க்ஸ்டர்ஸ் படங்களில் ஒரு கோஷ்டியின் தலைவனை விட அவனுக்கு பக்கத்திலே நின்று ஓவர் உதார்விடும் தளபதிதான் எதிர்கோஷ்டிக்கு செம்ம்ம கடுப்பை தருவார். இவரது அட்ராசிட்டியால் ஆப்போசீட் கோஷ்டி அடடக்க முடியாத ஆத்திரத்தில் இருக்கும். பல நேரங்களில் தலைவர்கள் கூட கம்முனு இருந்துவிடுவார்கள்.
ஆனால் இந்த கை_களால் இம்சைகள் கூடிகிட்டே இருக்கும். இதனால் மோதல் வெடிக்கும். ஜெமினி பட ஸ்டைலில் சொல்வதானால் ”ன்னா ஜெமினி உன் ‘கை’ ரொம்ப துள்றாப்ல, இதுலாம் ஆவறதில்ல. சொல்லி வை.” என்கிற லெவலில் மிரட்டல் டயலாக்குகள் வந்து விழும். அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்குள்ளும் கிட்டத்தட்ட இப்படியான சண்டைகள்தான் நிகழ்கின்றன.
பன்னீர் அணியின் ‘கை’யாக எடப்பாடி அணியினர் நினைப்பது முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனை, இந்த கையிலிருக்கும் விரல்களாக முனுசாமி மற்றும் செம்மலை ஆகியோர் வருகிறார்கள். அதேபோல் எடப்பாடி அணியின் ‘கை’யாக பன்னீர் தரப்பு நினைப்பது அமைச்சர் ஜெயக்குமாரை. இது போக சி.வி.சண்முகம், அப்பப்போ எஸ்.பி.வேலுமணியெல்லாம் வந்து போவார்கள்.
பன்னீரே கொஞ்சம் பதமாக நடந்தாலும் கூட பாண்டியராஜன் அவரை உசுப்பேற்றி ஓவர் ரவுசாக பேச வைக்கிறார் என்று எடப்பாடி டீமுக்கு எரிச்சல். அதிலும் மாஃபா நெடுங்கால அ.தி.மு.க. விசுவாசி இல்லை என்பது எடப்பாடி அணி எடுத்து வைக்கும் தாக்குதல் வாதம். ஆர்.எஸ்.ஏஸ்_ல் இருந்தவர், தே.மு.தி.க.வில் வாழ்ந்தவர் சமீபமாக அம்மாவின் அடிபற்றி நம்ம கட்சிக்குள் வந்தவர் அப்படியே அமைச்சராகி இப்போது கட்சிக்கு எதிராகவே புரட்சி செய்கிறார்! இந்த விசுவாசியை நம்பித்தான் பன்னீரும் அரசியல் செய்கிறார் பாவம்...என்று போட்டுப் பொளக்கிறார்கள்.
இவர்கள் எரிச்சலாகும்படிதான் மாஃபாவும் வாழைப்பழத்தில் கடப்பாறையை ஏற்றுவது போல், அமைதியான குரலில் அப்பாடக்கர் வார்த்தைகளை அள்ளித்தட்டுகிறார் என்று பன்னீர் அணிக்குள்ளேயே ஒரு புகைச்சல் இருக்கிறது. கடந்த வாரம் பன்னீர் தன் தொகுதியில் போய் மக்களிடம் மனுக்களை வாங்கிய நேரம், மாஃபாவும் ஆவடிக்கு போயி ஆயாக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று லைவ் செய்திகளில் வந்ததை பன்னீர் அணியில் சிலர் ரசிக்கவில்லையாம்.
இருந்தாலும் கூட முன்பு போலில்லாமல் இப்போதெல்லாம் டெல்லியை நம்பியே அரசியல் செய்ய வேண்டியிருப்பதால் பாண்டியராஜன் மீது பாய்ச்சல் காட்ட பன்னீரும் விரும்பவில்லை. மைத்ரேயனுக்கு ஒத்தாசையாக டெல்லி லாபி செய்ய பாண்டியராஜன் நிச்சயம் தேவை என்று சொல்கிறாராம் பன்னீர். ‘ஒரு தேர்ந்த அரசியல்வாதி, ஒரு நல்ல பிஸ்னஸ் மேனாகவும் இருக்கணும்ணே. நம்ம பாண்டியராஜனோ ஏற்கனவே பெரிய பிஸ்னஸ் மனுஷன். லாப நட்ட கணக்கு போட்டு காய் நகர்த்த அவர் வேணும் நமக்கு.”என்று தன் அணியினரை சமாதானம் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் சமீப காலமாக வாட்ஸ் ஆப்பில் உலாவரும் ஒரு வீடியோ மாஃபாவை ஏகத்துக்கும் எரிச்சலூட்டி இருக்கிறதாம். பாண்டியராஜன் ஒரு ஆர்.எஸ்.எஸ். மற்றும் தி.மு.க.வின் ஏஜெண்ட் என்று வாய்ஸ் ஓவரில் வறுத்தெடுக்கும் அந்த வீடியோவில், மாஃபா ஆர்.எஸ்.எஸ்.ஸில் கம்பு சுற்றி பயிற்சி எடுப்பது, கனிமொழியோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வந்து போகிறதாம். இந்த வீடியோவுக்கான கிரியேடீவ் ஹெட்டே எடப்பாடி டீமை சேர்ந்த ஒரு விஷமிதான் என்று பொங்குகிறாராம் பாண்டியராஜன்.
இதற்கு பதிலடியாக கூடிய விரைவில் ‘மீனவ நண்பன்’ புள்ளியை காய்ச்சி எடுக்கும் விமர்சன வீடியோ ஒன்று தயாராகிவிட்டது. தன் இன மக்களை அவர் கண்டும் காணாமல் கடலில் தவிக்க விட்டது, வாக்கு சொல்லி நிறைவேற்றாத திட்டங்கள், கடந்த ஆட்சியில் அம்மாவின் கோபத்துக்கு ஆளாகி பாதி மேட்சிலேயே ரன் அவுட் ஆனது, சசிகலாவை விலக்கி வைத்துவிட்டதாக அறிவித்தும் அது எடுபடாமல் டக் அவுட் ஆனது என்று எல்லாவற்றையும் அள்ளிப்போட்டு ரகளையான புளியோதரை கிண்டியிருக்கிறார்களாம். ‘பொட்டி ரெடி’ என்று ரிலீஸுக்காக குரல் கொடுக்கிறது பன்னீர் டீம். எப்போது வேண்டுமானாலும் அப்லோட் ஆகலாமாம். தொண்டர்களோடு, நெட்டிசன்களும் நெடுநேரமாய் காத்திருக்கிறார்கள்...
தம்பி இன்னும் டீ வர்ல!
