திமுக ஆட்சிக்கு வந்தால் மின் தடை இருக்கும் என்பதை தற்போதும் நிரூபித்துள்ளனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மின் தடை இருக்கும் என்பதை தற்போதும் நிரூபித்துள்ளனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது. இதில், சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்ததால் 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் திருவிழாவின் போது ஏற்பட்ட சப்பர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண தொகையை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கினார். அதன்படி, விபத்தில் இறந்த 11 பேரின் குடும்பத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலா ரூ.1 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், களிமேடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அக்குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுக 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தியது. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை இப்போதைய திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஓராண்டு காலத்தில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. நீண்டகால, குறுகியகால சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும் என்பது இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் பேருந்தில் செல்வது உலக மகா சாதனையல்ல. மொத்தத்தில் இந்த ஆட்சி கடந்த ஓராண்டில் பாஸ் மார்க் வாங்காமல் தோல்வியைச் சந்தித்துள்ளது என்று தெரிவித்தார்.
