ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், வாக்களித்தவர்கள் மனநிலைப்படி நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை மெரினாவில் இளைஞர்கள் கூட உள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் திரள தினம் தினம் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து லட்சக்கணக்கானோர் மெரினாவை ஆக்கிரமித்து அறவழியில் போராட தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியது.
இதனால் மத்திய மாநில அரசுகள் இறங்கி வந்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தனர். இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது இதன் மூலம் நிரூபணமானது.
தமிழக அரசியலில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மெரினாவில் காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலைவரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அதிரடி போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஆனால் போலீசார் எதிர்பார்த்த படி இளைஞர்கள் யாரும் வரவில்லை.
