தினகரன் ஆதரவாளர்கள், அரசியல் எதிர்காலத்தை இழந்துவிட வேண்டாம்; எனவே மீண்டும் தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு துணை முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுகவிலிருந்து தனித்துவிடப்பட்ட தினகரன், அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்டெடுப்பதே இலக்கு என தினகரன் செயல்பட்டு வருகிறார். அந்த இலக்கை எட்டும் வரை அரசியல் ரீதியான அமைப்பு தேவை என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தொடங்கி தனித்து செயல்பட்டு வருகிறார்.

தினகரனின் ஆதரவாளர்கள், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எல்லாம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளனர்.

தினகரனை பெரிய பொருட்டாக மதிக்காத ஆட்சியாளர்களுக்கு, ஆர்.கே.நகரில் அவர் பெற்ற வெற்றி கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில் தான், தனி இயக்கத்தை ஆரம்பித்து அடுத்தடுத்து அடியெடித்து வைக்கிறார் தினகரன்.

இந்நிலையில், தினகரனுடன் இருப்பவர்களுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் 120 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. அந்த விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக அரசியலில் சில வேடர்கள் விரித்த வலையில் சிக்கியவர்கள், அங்கேயே இருந்து அரசியல் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். மீண்டும் வாருங்கள். நாம் அனைவரும் இணைந்து தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம் என தினகரன் ஆதரவாளர்களுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.