ஓபிஎஸ் டெல்லி பயணம் குறித்து அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரதமர் மோடியின் தூதரும் மாநிலங்களவை உறுப்பினருமான புபீந்தர் யாதவ் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து வந்த திடீர் அழைப்பால் ஓபிஎஸ் மற்றும் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் டெல்லி விரைந்தனர். 

இன்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஏர் ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தான் அதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சரை இன்று பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் திடீர் எதிர்பாராத விதமாக புபீந்தர் யாதவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சந்தி்ப்பில் முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் உடன் சென்றனர். புபீந்தர் யாதவ் என்பவர் பா.ஜ.க. மேல்மட்ட தலைவர்களில் முக்கியமானவர் ஆவார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் நம்பிக்கைக்கு உரியவராக புபீந்தர் கருதப்படுகிறார். 

இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் தொடர்பாகவும், முக்கியமாக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் போக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் இடத்தில் வருமானவரிச் சோதனைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் டெல்லி செல்வதற்கு முன்னர் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்த தகவல்களும் புபீந்தருடன் பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.