ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், மக்கள் விரோத ஆட்சி அமைந்துள்ளது. அது தூக்கி எறியப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வாக்காளர் பேரணி நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பி.எஸ் தலைமையிலான குழுவினர் ஜெயலலிதா சமாதியில் வணங்கினர்.
பின்னர், செய்தியாளர்களை ஓ.பி.எஸ்சும் மதுசூதனனும் சந்தித்தனர். அப்போது பேட்டியளித்த மதுசூதனன் மக்கள் விரும்பாத ஒரு ஆட்சி வந்துள்ளது.
இந்த ஆட்சியை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் மக்களிடத்தில் பேசி மக்கள் விரும்பினால் ஆதரிக்கலாம். ஆனால் மக்கள் விருமபாதவர்களை ஆதரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? மாறியது இலட்சங்களா? கோடிகளா?
சிறையில் இருக்கும் சசிகலா குடும்பம் ஆட்சியில் இருக்கிறது. அம்மா கட்சியில் ஒதுக்கி வைத்தவர்கள் இன்று பதவியில் இருக்கிறார்கள். அம்மாவின் மரணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
நடராஜன் அப்போலோ மருத்துவமனையில் தங்கியிருந்தது என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பினார்.
இதன்பின்னர் பேசிய ஓ.பி.எஸ் கூறியதாவது :
2011 ஆம் ஆண்டு அம்மாவால் வெளியேற்றப்பட்ட சசிகலா வீட்டு கும்பல் இன்று ஆட்சிக்கு வந்துள்ளது.
அம்மா எல்லோரையும் வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தாரை என் உயிர் உள்ளவரை அனுமதிக்க மாட்டேன் என்று கட்சியில் இருந்து விளக்கி வைத்தார்கள்.
அம்மா இறக்கும்வரை இவர்கள் கட்சியில் இருந்து விளக்கி வைக்கபட்டிருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது.
இன்று பதவி ஏற்றுள்ள ஆட்சி அம்மாவின் ஆட்சி அல்ல. இது சசிகலாவின் குடும்பத்தின் ஆட்சி. இது அம்மாவின் ஆன்மா வழிகாட்டும் ஆட்சியல்ல.
மக்கள் விரோத ஆட்சி. எம்.எல்.ஏக்கள் நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி அந்தந்த தொகுதியில் வாக்காளர் பேரணி நடைபெற உள்ளது.
124 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மாறாக முடிவெடுக்க வேண்டாம். மக்கள் விரும்பாத இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்.
இந்த மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படும். இதை அகற்ற தமிழக மக்கள் சபதம் ஏற்றுள்ளார்கள்.
இவ்வ்வாறு அவர் தெரிவித்தார்.
