மத்திய பாரதிய ஜனதா அரசு மீது கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஒபிஎஸ் மார்ச் 29 வரை மத்திய அரசு என்ன செய்கிறது என பார்ப்போம் என துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பதிலளித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

கடந்த 11 நாட்களாக பல்வேறு பிரச்சனை காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக அரசு அதற்கு ஆதரவு அளிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி மத்திய அரசு ஏதேனும் தகவல் தெரிவித்துள்ளதா எனவும் சட்டப்பேரவையில் அரசுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

எதிர்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்தில் இன்னும் அவகாசம் இருப்பதால் அதுவரை பொறுத்திருப்போம் என தெரிவித்தார். 

இவ்விகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தகவல் வரும் வரை அதிமுக எம்.பி-க்களின் போராட்டம் தொடரும் எனவும் 11 ஆவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் அதிமுக எம்.பிக்களின் தொடர் போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளதாகவும் மத்திய அரசு என்ன செய்கிறது என்று வரும் 29ஆம் தேதி வரை பொறுத்து பார்ப்போம் எனவும் பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.