பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 500 கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய விவகாரத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின்  மகள், நிரவ் மோடியிடமிருந்து தனது சட்ட நிறுவனத்துக்காக  பெரும் தொகையை பெற்றுள்ளதால் தான் அவர் அமையிதயாக இருக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரும் கீதாஞ்சலி நகை நிறுவன அதிபருமான மெகுல் சோக்சியும் மும்பை பிராடி ஹவுஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் உத்தரவாத கடிதம் பெற்று, பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றன. இந்த நடவடிக்கைக்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதமே நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று பெங்களுரூவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்ததில் முக்கியக் குற்றவாளியான நிரவ் மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தப்பிச் செல்ல யார் உதவியிருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அதில்  வங்கி மோசடி விவகாரத்தில் தனது மகளை காப்பாற்றவே நிதி அமைச்சர்  ஜெட்லி அமைதியாக இருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார். 

வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட சில குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஒரு மாதத்துக்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார். இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் நிதி  அமைச்சர்  மவுனம் காத்து வருகிறார் என குறிப்பிட்டார்.

 இதுபோன்ற சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் நிலையில்,  அருண் ஜெட்லி மகளின்  சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.