சென்னையில் முதற்கட்டமாக 2100 பேருந்துகளில் பேனிக் பட்டன் எனும் அவசர ஒலி அழைப்பு அமைக்கப்படும்,  இதன் மூலம் பணிமனைக்கு தகவல் உடனடி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பேருந்திலும் (பேனிக் பட்டன்) அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 2100 பேருந்துகளில் இந்த பேனிக் பட்டன் பொருத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனமும் அரசு மீது இருந்து வருகிறது. கடந்த சில நாட்களில் அரசு பேருந்துகளில் நடந்த நிகழ்வுகள் அரசுக்கு பெரும் அவமானத்தையும், தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. பழங்குடியினர் சமூகமான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பயணிகளை நடத்துனர் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது. அதேபோல் மீன் வியாபாரம் செய்யும் பெண்ணை மீன் வாடை வீசுவதாக கூனி அவமானப்படுத்தி பேருந்தில் இருந்து கியே இறக்கி விட்ட சம்பம் வைரலானது. இதேபோல் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவியை நடத்துனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, சென்னையில் பயிலும் கல்லூரி மாணவி ஒருவர் சொந்த ஊரான விழுப்புரத்திற்கு இரவு நேரத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் அனைத்து பயணிகளும் பேருந்திலிருந்து இறங்கி விட்டனர். அப்போது அந்த மாணவி மட்டும் பேருந்தில் தனியாக இருந்துள்ளார். அதை பார்த்த நடத்துனர், அந்த மாணவியின் அருகில் வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அம்மாணவி, கத்திக் கூச்சலிட்டார். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். ஓடும் பேருந்தில் நடத்துனரை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனர் சிலம்பரசன் மற்றும் ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

இப்படி பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடங்கியுள்ள இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் விரைவில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கூறியுள்ளார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர் சந்தித்த அவர் கூறியதாவது:- நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்தில் மூன்று இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் அமைக்கப்படும். சென்னையில் முதற்கட்டமாக 2100 பேருந்துகளில் பேனிக் பட்டன் எனும் அவசர ஒலி அழைப்பு அமைக்கப்படும், இதன் மூலம் பணிமனைக்கு தகவல் உடனடி பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச அழைப்பு எண்ணும் அனைத்து பேருந்துகளும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், நரிக்குறவர்கள் என பல தரப்பினரும் பேருந்தில் பயணம் செய்வார்கள் ஆனால் சில நடத்துனர்கள் அவர்களை இறங்கிவிடுகிறனர். எனவே ,இது தொடர்பாக நடத்துனர் ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி போன்று பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29 ம் தேதி அங்கீகரிக்கப்படும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபடும் என்றார்.