அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு 7 + 1 சீட் வாங்கியுள்ளது பாமக தரப்பில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்பட அமைச்சர்கள் எல்லோருக்கும் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார் ராமதாஸ். அந்த விருந்தில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்பட அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள், விருந்தளிப்பது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கிண்டல் செய்துள்ளார்.

திருச்சியில் இன்று சந்தித்த வேல்முருகன்; ரயில்வே உட்பட மத்திய அரசுப் பணிகள், 60 ஆயிரம் வரை நிரப்பப்பட்டு உள்ள நிலையில், இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை.

அது மட்டுமா. தமிழகத்தில், 1.20 கோடி வட மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள். சத்தமின்றி தமிழர்களின் வாழ்வுரிமையை அவர்கள் பறித்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், 100% தமிழர்களுக்குத்தான் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும், 28ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்; சேலம் 8 வழிச்சாலை பணிக்கு நீதிமன்றத்தில் தடையாணை வாங்கினேன் என்று கூறியவர்களே, இப்போது சாலை திட்டம் போட்டவர்களிடம் கூட்டணி வைத்துள்ளனர். அந்த சாலைக்கான மொத்த திட்டச் செலவு, 40 ஆயிரம் கோடி. அதில் கமிஷன் தொகை 4 ஆயிரம் கோடி. பாதி கிடைத்தவுடன் கூட்டணி அமைத்து கொண்டு, ஒன்றாக விருந்து சாப்பிடுகின்றனர் என இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.