பிள்ளை பிடிப்பது போல அமமுகவினரை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பிடித்து வருவதாக சேலத்தில் அமமுகதுணைப்பொதுச்செயலாளர் பழனியப்பன் பேசியுள்ளார்.

தருமபுரி, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் தினகரன், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். சேலம் மாவட்ட அமமுக சார்பில் கொண்டலாம்பட்டி அடுத்த பூலாவாரியில்  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நேற்று பிரமாண்டமாக நடந்தது.

கூட்டத்தில் பேசிய பழனியப்பன், ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி அவர்களே... உங்களுடைய அதிகாரம் எதுவரை என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் சின்னம்மாவிடம் தவழ்ந்து தவழ்ந்து எப்படி பதவி பெற்றீர்கள் என்பதும் தெரியும். அமமுகவினர் நிர்வாகிகள் மீது இருக்கும் பழைய வழக்குகளை தூசுத் தட்டி உளவுத் துறையினர், போலீஸ் மூலம் மிரட்டி உங்கள் பக்கம் இழுத்துக் கொள்கிறீர்கள். இந்த பிள்ளை பிடிக்கும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார்.

இறுதியாகப் பேசிய தினகரன், “தமிழகத்தில் அமமுக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆணிவேராக இந்த இயக்கத்தைத் தூக்கிப் பிடித்திருக்கும் தொண்டர்கள்தாம். அதனால் தான் அமமுகவினரை மட்டுமே வலைவீசி பிள்ளை பிடிப்பவர்களைப் போல எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும்  பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அமமுக ஆளுங்கட்சியாக வளர்ந்துவிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.

தலைமையில் ஆரம்பித்து கிளைக் கழகம் வரை நமது நிர்வாகிகளை உளவுத் துறை வைத்து மிரட்டி இழுக்கும் வேலையை பார்க்கிறார். குறிப்பாக தொழில் செய்பவர்களை மிரட்டியும், ஆசைவார்த்தை கூறியும் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். பலவீனமாக இருப்பவர்கள் அவர்கள் பக்கம் சென்றுவிடுகிறார்கள் என்றும் கூறினார்.