ஜெயலலிதா அரசாள்கையில், அரசு விழா மேடைகளில் ‘மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள்’ என்று விளிக்கப்படுவதை பெரிதும் விரும்புவார். அப்போது அவரது கண்களில் தனி கர்வம் தெரியும்! 

ஆனால் அவரது மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வோடு சேர்ந்து ஜெயலலிதாவின் பர்ஷனல் வாழ்க்கையும் பலவிதமான அங்கலாய்ப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமானது ‘ஜெயலலிதா எனது அம்மா!’ என்று சொல்லி, பெங்களூருவை சேர்ந்த ‘அம்ருதா’ எனும் பெண் வழக்கு தொடந்தார். 

இந்த வழக்கினை இப்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கும் மதுரை உயர்நீதிமன்ற கிளை “ஜெயலலிதாவின் மரணம் மர்மமாகவே உள்ளது. அதனால் ஆதாயம் பெறும் வகையிலும், விளம்பர நோக்கிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான ஆவண, இல்லாததால் டி.என்.ஏ. சோதனை கோருவது ஏற்புடையதல்ல. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.” என்று  குறிப்பிட்டுள்ளது. 

இந்த தீர்ப்பினை தொடர்ந்து, அம்ருதா வெளியே வந்தபின் தொடர்ந்து பேட்டியளித்த ஜெயலலிதாவின் சகோதரி, சகோதரர் ஆகியோர் அளித்த ‘ஆம் ஜெயலலிதாவுக்கும் - சோபன் பாபுவுக்கும் ஒரு மகள் பிறந்தாள்.’ எனும் மிகப்பெரிய ஸ்டேட்மெண்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக ஆகியுள்ளது. 

ஆக்சுவலி அந்த வார்த்தைகள் ஜெயலலிதாவின் ‘செல்வி’ எனும் அடையாளத்தை கேலிக்குறியதாக்கி இருந்த நிலையில், தீர்ப்பு இப்படி வந்துள்ளது. 


அப்படியானால் ஜெ.,வின் ரத்த உறவுகள் அவரை எந்த அடிப்படையில், எந்த நோக்கத்தில் அப்படி அசிங்கப்படுத்தினார்கள், அதற்கு தூண்டியது யார் யார்? இதன் மூலம் அந்த உறவுகள் அடைந்த ஆதாயம் என்ன? என்பதையெல்லாம் தோண்டித் துருவி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. 

’ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம்! என்று சொல்லி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தாமாக முன் வந்து இந்த காரியத்தை செய்ய வேண்டும். தங்களின் உயிரை விட பெரியதாக நினைக்கும் அம்மாவின் புகழுக்கு இழுக்கு சேர்த்தோரை தண்டிக்காமல் விடுவது அழகா? எனவே இரு முதல்வர்களும் இந்த காரியத்தை இணைந்து நின்று செய்திட வேண்டும், இதற்குள்  இதற்கான முயற்சியை எடுத்திருக்க வேண்டாமா?’ என்று கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

செய்வீர்களா பன்னீர்? செய்வீர்களா பழனிச்சாமி? நீங்கள் செய்வீர்களா?