அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சிவகங்கையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் சரி, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான கடந்த ஓராண்டாகவும் சரி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக அரசு மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை வைக்கவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தினந்தோறும் ஊடகங்களிடம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக ஸ்டாலின் தெரிவிக்கிறார். ஆனால் உண்மையில் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகிய குற்றச்செயல்கள் மலிந்து காணப்பட்டன என முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சிக்காலத்தில், உங்களில் எத்தனை பேர் இதுபோன்ற குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது உங்களுக்கே தெரியும் என விழாவிற்கு வந்திருந்தவர்களை நோக்கி தெரிவித்தார்.