palanisamy assured to set drainage facility

சென்னை புறநகர்ப் பகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பல பகுதிகளில் ஏரிக்கு அருகில் தாழ்வான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதால்தான் தண்ணீர் தேங்குகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை டெல்லிக்கு வழியனுப்பி விட்டு சென்னை விமானநிலையத்தில் மோடியுடனான சந்திப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சென்னை புறநகர்ப் பகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஏரிகளை ஓட்டி தாழ்வான பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏரிகளை ஓட்டி வீடுகள் கட்டியதால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர், ஏரிகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் அனுமதியின்றி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 

நாராயணபுரம் ஏரிக்கு கீழே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அப்படி இருப்பதால்தான் கனமழை பெய்யும் போது தண்ணீர் தேங்குகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் மின்மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. 

கனமழையின்போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண அரசு முயற்சித்து வருகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த திட்ட விளக்கத்தை பிரதமரிடம் அளித்து 1500 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது.

திட்ட விளக்கத்தை ஆய்வு செய்து தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். கனமழை பாதிப்பு குறித்து கேட்டறிந்து நிதி ஒதுக்குவதாக உறுதியளித்த பிரதமருக்கு நன்றி.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.