palanisamy and panneerselvam advice to admk MPs

வரும் 15-ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. எனவே பாராளுமன்றத்தில், அதிமுக எம்.பிக்கள் செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக எம்பிக்கள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தினகரன் அணியிலிருந்து அதிமுகவிற்கு தாவிய 5 எம்பிக்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்குது. பாஜகவுக்கு எதிராக நாம் இதுவரை எதுவும் பேசியது இல்லை. இப்போதும் பேசிய வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. அதனால், வழக்கம்போலவே நீங்க(அதிமுக எம்பிக்கள்) மத்திய அரசுக்கு எதிராக எதையும் பேச வேண்டாம்.

அதேபோல பொதுவெளியில் எந்த கருத்தை சொல்வதாக இருந்தாலும் என்னிடமோ அல்லது பன்னீர் அண்ணனிடமோ ஒரு வார்த்தை கேட்டுவிட்டுப் பேசுங்க. உங்க மனசுக்கு சரின்னு பட்ட விஷயம் கட்சிக்கு எதிரானதாக இருக்கும். அந்த மாதிரியான கருத்துகளை பொதுவெளியில் சொல்லாமல் இருப்பது சில நேரங்களில் நல்லதாக இருக்கும். கட்சி இப்போதுதான் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. அதை சரியாக கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அந்தப் பக்கம்(தினகரன்) இருக்கும் ஆட்கள் எல்லாம் ஒவ்வொருவராக இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் எல்லோருமே நம் பக்கம் வந்துடுவாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், அம்மா இருந்த வரைக்கும் டெல்லியை தம்பிதுரைகிட்ட ஒப்படைச்சு இருந்தாங்க. இப்பொழுதும் எதுவாக இருந்தாலும் அவரிடம் கேட்டுத்தான் செய்துகொண்டிருக்கிறோம். மத்திய பாஜக அரசுக்கு அடங்கி போகிறோம், அடிமையாக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறவர்களைப் பற்றியும் அந்த கருத்துகளைப் பற்றியும் கவலைகொள்ள வேண்டாம். நாம் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அவ்வளவுதான்.. நாம் கேட்பதை மத்திய அரசு செய்துகொடுக்கிறது. அதனால் மத்திய பாஜக அரசுடன் விரோத போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார்.

தம்பிதுரை டெல்லியில் இருப்பதாலும் வடசென்னை எம்பி வெங்கடேஷ்பாபு, தேர்தல் வேலைகளில் பிசியாக இருப்பதாலும் அவர்கள் இருவர் மட்டும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.