திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபகாலமாக கோவில் கோவிலாக ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

துர்கா ஸ்டாலின் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர். திமுக தலைவர் ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் கூட அவரது மனைவி அவருக்கும் சேர்த்து பக்தியுடன் இருக்க கூடியவர். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பிரபல கோவில்களுக்கு அடிக்கடி சென்று வருபவர் துர்கா.

ஆனால் குறுகிய கால இடைவெளியில் துர்கா ஸ்டாலின் அடுத்தடுத்து கோவில்களுக்கு சென்று வருவது புதியதாக இருக்கிறது. அத்திவரதர் வைபவத்தின் போது விஐபி தரிசனத்தில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார் துர்கா ஸ்டாலின், இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினார்.

இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார் துர்கா. இதோடு அவர் திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. குறுகிய இடைவெளியில் இப்படி கோவில் கோவிலாக துர்கா சென்று வருவதற்கு காரணம்  திமுக தலைவர் ஸ்டாலினுக்குத்தான் என்கிறார்கள்.

குறிப்பிட்ட சில கோவில்களின் பெயர்களை குறிப்பிட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினால் ஸ்டாலின் புதிய உச்சங்களை தொடுவார் என்று ஜோசியர் கூறியதாகவும் இதனை அடுத்தே துர்கா ஸ்டாலின் ஆன்மிக பயணத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.