சட்டமன்ற தேர்தல் வியூகம் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பட ஸ்டாலின் முடிவெடுத்த நிலையில் திமுக கார்ப்பரேட் போல் செயல்படுவதாக கூறி விலகியுள்ளார் பழ கருப்பையா.

2016ம் ஆண்டு ஜெயலலிதா – சசிகலாவை கடுமையாக விமர்சித்து அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பழ கருப்பையா. அடுத்த சில நாட்களில் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதன் மூலம் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழ கருப்பையாவுக்கு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இருந்தாலும் கூட திமுகவில் பழ கருப்பையா தொடர்ந்து நீடித்து வந்தார். ஆனால் கட்சி சார்பிலான கூட்டங்கள், திமுக பிரச்சார மேடைகளில் அவரை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென இன்று செய்தியாளர்களை சந்தித்து திமுகவில் இருந்து தான் விலகிவிட்டதாக கூறியுள்ளார் பழ கருப்பையா. காரணம் குறித்து கேட்ட போது அரசியல் கட்சி அரசியல் கட்சியாகத்தான் செயல்பட வேண்டும், கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படக்கூடாது என ஒரே போடாக போட்டுள்ளார்.

மக்களிடம் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை தெரிவிக்க வேண்டும், அவர்கள் ஏற்றுக் கொண்டால் தேர்தலில் வெற்றி கிடைக்கும் இல்லை என்றால் தோல்வி தான். மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களை போல் தனது தனிப்பட்ட செல்வாக்கை பெருக்க தனியார் நிறுவனங்களை பயன்படுத்தினால் அதனை எப்படி கட்சி என்ற அழைக்க முடியும் என்றும் பழ கருப்பையா கேள்வி எழுப்பினார்.

அதாவது நேற்று முன் தினம் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்காக கிஷோரின் நிறுவனம் பணியாற்ற ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் பழ கருப்பையாக அக்கட்சியில் இருந்து விலகினார். முன்னதாக திமுகவில் ஸ்டாலினின் இமேஜ் மேக் ஓவருக்கு உதவியாக இருந்தவர் சுனில்.

இவர் முன்னர் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்காக பணியாற்றியவர். மோடி குஜராத் முதலமைச்சராக 3வது முறை தேர்வு செய்யப்பட்ட போது கிஷோரின் டீமில் இருந்தவர் சுனில். இவர் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூட சொல்லப்பட்டது. இதனால் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஸ்டாலினை நெருங்க முடியவில்லை என்றும் பேசப்பட்டது.

சுனிலை விட பல மடங்கு செல்வாக்கு மிக்கவர் பிரசாந்த் கிஷோர். அவருடன் ஸ்டாலின் இணைந்தால் திமுக மேல்மட்ட நிர்வாகிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும் என்கிறார்கள். இதனால் இப்போதே நிர்வாகிகள் சிலர் யோசனையில் உள்ளதாகவும் மேலும் கடந்த பல ஆண்டுகளாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளவர்கள் திமுகவின் புதிய கார்ப்பரேட் பாசத்தை முன் வைத்து விலகினால் பாஜக, அதிமுகவில் நல்ல பதவி கிடைக்கும் என்று கணக்கு போடுவதாக பேச்சு அடிபடுகிறது.