திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கர் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாஜக வீழ்த்தியுள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சி அமைய உள்ள நிலையில், அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலை ஒன்று இடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 

தமிழகத்தில் அரசியல் கட்சியினர், முற்போக்கு சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பதிவை நீக்கிய எச்.ராஜா, வருத்தம் தெரிவித்து முகநூல் பதிவு இட்டதோடு, தனது முகநூல் பக்கத்தை நிர்வகிப்பவர் தான் அந்த பதிவை போட்டதாக விளக்கமும் அளித்தார்.

இதனிடையே வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் உடைத்தனர். இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அது இன்னும் அடங்காத நிலையில், அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கர் சிலை மீது சிலர் பெயிண்டை வீசியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

எச்.ராஜாவின் முகநூல் பதிவை அடுத்து, சமூக நீதிக்கு எதிராக போராடிய தலைவர்களின் சிலை சேதப்படுத்தப்படுவதும் தகர்க்கப்படுவதும் தொடர்ந்து வருவதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.