பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்கிற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரை நினைவுகூர்ந்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 17ம் தேதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை காந்தி மண்டபம், தியாகிகள் மணிமண்டப முகப்பில் மூவரின் திருவுருப் படங்களுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனச் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமே ஆகும். தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் தொடங்கியதா என்பதை ஐசிஆர்ஆரோ, உலக சுகாதார அமைப்போ அறிவிக்கும் என கூறினார். இது பற்றி அறிவிப்பு வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கே மருத்துவம் படித்தார் என்று தெரியவில்லை என்று விமர்சனம் செய்தார். 

மேலும், ரஜினி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியுடன் அமைச்சர்கள் பேசமாட்டார்கள். அமைச்சர்கள் யாருடனும் பேசமாட்டார்கள். இங்கிருந்து துரோகம் செய்யும் கும்பல் கிடையாது. ஜெயலலிதா, எம்ஜிஆர் மீது விசுவாசமுள்ள கூட்டம் அதிமுக கூட்டம் என்று தெரிவித்துள்ளார்.