Padmavati row Vijay Rupani says will block film release in Gujarat
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பத்மாவதி திரைப்படத்துக்கு குஜராத்திலும் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்டுள்ள படம் பத்மாவதி. இது, வரும் டிசம்பர் 1ஆம் தேதி திரைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பாஜக., ராஜபுத்ர சேனா, கர்னி சேனா என பல அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோன் மூக்கை அறுப்போம் என்று ஒரு அமைப்பு அறிவிக்க, தீபிகா படுக்கோன், டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு என்றெல்லாம் இன்னும் சில அமைப்புகள் அறிவிக்க, இப்போது தீபிகா படுகோனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து தங்கள் மானத்தைக் காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி. ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிப் படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தப் படத்துக்கு ராஜஸ்தான், உத்தரபிரதேச அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டால் ‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இதை அடுத்து, பஞ்சாப் மாநில அரசும் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் இப்போது குஜராத் அரசும் சேர்ந்து கொண்டுள்ளது. குஜராத்தில் பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விஜய் ரூபானி தனது டிவிட்டர் பதிவில்... “பத்மாவதி படத்தை குஜராத் அரசு அனுமதிக்காது. நமது வரலாறுகள் சிதைக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். கருத்து சுதந்திரத்தை மதிக்கிறோம் என்றாலும் நமது கலாசாரத்தை மோசமாகத் திரிப்பதை பொறுத்துக்கொள்ள இயலாது” என்று கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு...
