ராமதாஸ் கட்சி நிற்கும் அத்தனை தொகுதிகளிலும் தோற்கடிக்க பாரிவேந்தர் பிளான் போட்டுள்ளாராம், அதுமட்டுமல்ல, ஏழு தொகுதியின் மொத்த செலவையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளாராம் பாரிவேந்தர். இந்திய ஜனநாயகக் கட்சி நடத்தி வரும் தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து,  பார்க்கவக் குலத்தைச் சேர்ந்த இவர் டாக்டர் பாரிவேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். 

எஸ்.ஆர்.எம். நிறுவனம், புதிய தலைமுறை தொலைக்காட்சி வைத்திருந்ததாலே, இந்திய ஜனநாயக கட்சி என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர். இந்தக் கட்சியை ஏன் ஆரம்பித்தேன் என்ற காரணத்தை அவரே சொல்லியிருக்கிறார். அதாவது தேர்தல் நேரங்களில் எல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி நிதி கேட்டு கடும் தொந்தரவு கொடுத்ததால், தானே ஒரு கட்சியைத் தொடங்கி தலைவராக மாறிவிட்டார். ஆரம்ப காலங்களில் இருந்து பிஜேபிக்கு ஆதரவாக இருந்தார். அவரது தொலைக்காட்சியும் எப்போதும் பிஜேபி ஆதரவாகவே இயங்கிவந்தது. 

கடந்த 2014ம் அண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஐஜேகே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தது. பெரம்பலூரில் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் அதிமுக வேட்பாளர் மருதுராஜாவிடம் தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததுமே கடும் கோபத்துக்கு ஆளானார் பாரிவேந்தர். 

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்றுதான் பேச்சுகள் கிளம்பின. தற்போதைய நிலையில், அந்த கட்சியை அதிமுக பாஜக தலைமை சீண்டாத நிலையில், திடீரென இப்போது, திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து  ஒரு சீட் வாங்கிவிட்டார்.  பார்கவ குல சமூகத்தவர்கள் ஆதரவு இப்போது திமுகவுக்கு மிகவும் பலமாக இருக்கும் என நம்புகிறது. இந்த டீலிங்கில் மிகப்பெரிய விஷயம் என்னன்னா? ராமதாஸ் கட்சியினர் நிற்கும் அத்தனை தொகுதிகளிலும், அவர்களைத் தோற்கடிப்பதற்கு அனைத்து வகையிலும் உதவுவதாக பாரிவேந்தர் உறுதி அளித்துள்ளாராம். 

அதுமட்டுமல்ல, பாமக நிற்கும் தொகுதியில், திமுக அணியில் யார் நின்றாலும் அவர்களது தேர்தல் செலவை தானே ஏற்ப்பதாகவும், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து ஜெயிக்கவைக்க தயார் என ஸ்டாலினிடம் உறுதியளித்தாராம் பாரிவேந்தர். பாரிவேந்தரின் இந்த சபதத்தால், பாமகவினர் தலைமை மண்டை காய்ச்சலில் இருக்கிறதாம். ஏற்கனவே, திருமா ஒரு பக்கம், இப்போ இன்னொரு தலைவலி இந்த பாரிவேந்தரா? என புலம்புகிறார்களாம் பாமகவினர்.

இது ஒருபுறமிருக்க,  கடந்தமுறை பெரம்பலூரில் சுமார் 50 கோடி வரை செலவு செய்து தோற்றதால் இந்த முறை திமுக வாக்கு வங்கியோடு, பணபலத்தில் பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சி தொகுதியைக் கேட்டு வாங்கி ஜெயிப்பார் என சொல்லப்படுகிறது.