2016 மார்ச் 13இல், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே தனது காதல் கணவரை பறிகொடுத்த சமூகச் செயற்பாட்டாளரான கவுசல்யா, இன்று கோவையில் சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவர், நிமிர்வு பறை இசைக் குழுவை நடத்தி வருகிறார். சக்தியிடம் தான் கவுசல்யா பறை இசை கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கோவை பெரியார் படிப்பகத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் கவுசல்யா, சக்தியின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கவுசல்யா திருமணத்திற்கு இயக்குனர் பா.ரஞ்சித் வரவேற்பு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்; கவுசல்யாவின் மறுமணம் முக்கியமான நிகழ்வு. அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். தனி நபராக போராடி சங்கரின் கொலைக்கு காரணம் ஆனவர்களுக்கு அவர் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். அவரின் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்க கூடியது. தற்போது அவர் திருமணம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், சகோதரி கவுசல்யாவின் திருமணம் தமிழகத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். சமூகத்தில் இது முக்கியமான மாற்றத்தை உருவாக்கும். இது பெரிய சமூக மாற்றத்தை நோக்கிய அடி என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.