Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவுக்காக மட்டும்தான் போராடுவீங்களா..? சாதி வன்கொடுமைகளை கண்டுக்க மாட்டீங்களா..? பா.ரஞ்சித் அறைகூவல்..!

எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும்  தனித்தனியாய் நிற்கிறோம் என இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். 

Pa Ranjith calls on caste fighters
Author
Tamil Nadu, First Published May 11, 2020, 1:12 PM IST

எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும்  தனித்தனியாய் நிற்கிறோம் என இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

Pa Ranjith calls on caste fighters

பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய் தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.

இந்த கொரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள். ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

Pa Ranjith calls on caste fighters

இந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம்,  டி. கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது  எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
தமிழகம் ஒரு சிறந்த முற்போக்கு மாநிலம் என்று நாம் என்னதான் பெருமையாக பேசிக்கொண்டாலும், சாதிக்கெதிரான மனநிலையை கட்டியெழுப்புவதில் நாம் இன்னும் தேக்க நிலையிலேதான் இருக்கிறோம். திராவிடம், தமிழ்த்தேசியம், கம்யூனிசம் என்று கருத்தியல் தளத்தில் பல தலைவர்களும், பல துணை அமைப்புகளும் சாதிக்கெதிராக இருக்கிற போதும், உழைக்கும் வர்க்க விளிம்புநிலை மக்களாக இருக்கக் கூடிய தலித் மக்கள் மேல் இந்த கொரோனா காலத்திலும் தொடுக்கப்படும் சாதிவெறி வன்முறைகள் ஏன் ஏற்படுகிறது? என்பதையும், சாதி ஒழிப்பு தளத்தில் நாம் எத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் சுய பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.

கொரோனா நோய்தொற்று எப்படி நம் முன் தீர்மானங்களை நொறுக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம்மிடையே இருக்கும் இசங்களும், கொள்கைகளும், சாதிவெறியின் போக்கை எந்த விதத்திலும் மடைமாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது . இதனை நாம் அறிந்து ஒப்புக்கொள்ளவேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோம்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் நாற்பத்தி நான்கு தனித்தொகுதி சட்டமன்ற தொகுதியில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்குள் நுழைந்த தனித்தொகுதி வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை கொண்டு இம்மாதிரியான பாதிப்புகள் நடைபெறும்போது கூட இம்மக்களுக்கு ஆதரவாக வந்து நிற்பதுமில்லை, பேசுவதுமில்லை என்பதே வேதனை.Pa Ranjith calls on caste fighters

இந்த தோல்வியை எல்லோரும் ஒப்புக்கொண்டு இந்த மனித சமூகத்தின் மிக இன்றியமையாத மனிதத் தன்மையை, மனித மாண்பை மீட்க நம்மை நாமே  பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மை கண்களை திறந்து இந்த கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது? என்ற முன்னெடுப்பை நாம் செய்தே ஆகவேண்டும். இதனை இப்போது நாம் செய்யத் தவறினால் இந்த நூற்றாண்டின் கொடுந்துயருக்கு  நாம் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.

உலகமே துவண்டு கிடக்கக் கூடிய இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு தலித்துக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios