கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கையாக, வரும் 14ம் தேதி வரை ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் முதல் பெரிய பெரிய உற்பத்தி தொழிற்சாலைகள் வரை அனைத்து தரப்புக்கும் பாதிப்புதான் என்றாலும், தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் பாதிக்கப்படுள்ள அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் விதத்தில் பொருளாதார ரீதியான சலுகைகளையும் அறிவிப்புகளையும் மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துத்தான் வருகிறது. 

ஆனால் அவையெதுவும் ஏழை, எளிய, தினக்கூலி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் போதாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் அழுத்தமாக தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுவருகிறது. 

வருமான வரி, ஜிஎஸ்டி செலுத்தியவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு கீழ் ரீஃபண்ட் வழங்க வேண்டியிருப்பவர்களுக்கு உடனடியாக அந்த தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் இதன்மூலம் 14 லட்சம் பேரும் ஜிஎஸ்டி தாக்கல் செய்தவர்களுக்கும் ரூ.5 லட்சத்திற்கு கீழான ரீஃபண்ட் உடனே வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்த அறிவிப்பை கண்ட முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ஏழை, எளிய மக்களை பற்றி கண்டுகொள்ளாத மனிதாபிமானமில்லாத அரசாக மத்திய பாஜக அரசு திகழ்வதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. அவர்களுக்கு நாள் ஊதியமோ, வருமானமோ கிடையாது. அரசின் முதல் கடமை ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பது. 

இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்.எத்தனை முறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது. இதனைச் செய்யாத வரை இந்த அரசு ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானமில்லாத அரசு என்று தானே கருத வேண்டும்? என்று டுவிட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.