சீனப் படைக்குள் இந்தியாவுக்குள் நுழைந்து 7 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லையில் அவ்வப்போது அத்துமீறி செயல்படுவது சீன ராணுவத்தின் வாடிக்கை. கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் என்ற இடத்தில் சீனப் படைகள் முகாமிட்டன. இந்தப் பதற்றத்தைக் குறைக்க இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று முன்தினம் மாலையில் திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் அத்துமீறி நடத்திய  20 பேர் வீர மரணத்தை தழுவினர். பதில் தாக்குதலில் சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இந்நிலையில் இந்தியாவுக்குள் சீனப் படைகள் நுழைந்து 7 வாரங்கள் ஆகிவிட்டன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், இந்தியப் பிரதமர் இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.