டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனிமைப்படுத்தப்பட்டார்.

தற்போது நாடு முழுவதும் உள் நாட்டு விமான சேவைகள் தொடங்கியுள்ளன. வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறும் என்றும், பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் என்றும், பாதிப்பு இல்லாதவர்கள், 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் 78 பயணிகளுடன் வந்தது. அந்த விமானத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் தங்கியிருந்த ப.சிதம்பரம், சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள், அவரை தனிமைப்படுத்தும் வகையில் கையில் முத்திரையிட்டனர். மேலும் தன்னை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதாக சுய உறுதிமொழியை அறிவித்து ப.சிதம்பரம் வீட்டுக்குக் கிளம்பினார்.