ஜெர்மனியில் நடந்ததுபோல இந்தியாவிலும் நடக்கிறது. இந்தக் காந்தி நாடு ஹிட்லர் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். “இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட இந்த 15 நாட்களில் மாபெரும் புரட்சி நாடு முழுவதும் நடந்துள்ளது. இதற்கெல்லாம் எந்த அரசியல் கட்சியும் காரணமல்ல. மாணவர்களும் இளைஞர்களுமே போராட்டத்துக்கு சொந்தக்காரர்கள். அவர்களாகவே முன்வந்து போராடுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிமுறையைக் காப்பாற்ற திரள்கிறார்கள். உண்மையில் இதில் அரசியல் கட்சிகள் தோல்வியடைந்துவிட்டன. 
இந்தப் போராட்டம் முஸ்லிம்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டம் அல்ல. ஆனால்,. இந்த அரசு அப்படி சித்தரிக்கிறது. இந்தப் போராட்டம் இந்தியாவில் வாழும் எல்லா மக்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டம். சரித்திரம் திரும்புகிறது என்று சொல்வார்கள் அல்லவா? ஜெர்மனியில் நடந்ததுபோல இந்தியாவிலும் நடக்கிறது. இந்தக் காந்தி நாடு ஹிட்லர் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. எதையும் எடுத்துச் சொன்னால் குதர்க்கமாக வாதம் வைக்கிறார்கள்.


ஒரு சட்டம் செல்லுமா, செல்லாதா என்று பேசாமலேயே அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது பெரிய அபத்தம். பிரதமர், உள்துறை அமைச்சரின் வார்த்தைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இரண்டு பேரும் மக்களின் அவநம்பிக்கையைச் சம்பாதித்துள்ளனர். தற்போதுள்ள அரசு இந்து தேசத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று ப.சிதம்பரம் பேசினார்.