மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது என்று ப.சிதம்பரம் அவரது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருக்கிறது. குறிப்பாக நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை எனவும், பொருளாதாரம் வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தியா குளோபல் வீக் 2020 நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், “எதைச் செய்யமுடியாது என்று நினைக்கிறோமோ.! அதைத் துணிந்து செய்துமுடிக்கும் மனப்போக்கும் தன்னம்பிக்கையும் இந்தியர்களிடத்தில் எப்போதுமே இருக்கும். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இதுபோன்ற நெருக்கடியான சமயத்தில் உலக நாடுகள் கொரோனாவுடன் போராடி வரும் நிலையில், இந்தியா முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது ட்விட்டர் பதிவில்' மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது. கடந்த 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொலைதொடர்பு, விமானப் போக்குவரத்து இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது. மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன். மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.